வகை
கைவினைப் பொருட்கள்
கைவினைப் பொருளின் பெயர்
ஆத்தங்குடி ஓடுகள்
பயன்பாடுகள்
வீடுகளின் தரைத்தளத்தை மூடுவதற்கும், அலங்காரத்திற்கும்
கூடுதல் விவரங்கள்
ஆத்தங்குடி ஓடுகள், "காரைக்குடி ஓடுகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகை ஓடுகள் விக்டோரிய கட்டடக்கலையில் பயன்படுத்தப்படும் தரை ஓடுகளை ஒத்த வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவ்வோடுகளில் வடிவியல் வடிவங்கள், பூ வடிவங்கள், வண்ணமயமான உருவங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகள் உள்ளதால் மிகப் பிரபலமாக உள்ளன. ஆத்தங்குடி ஓடுகள் வெறும் தரையை மூடுவதற்கான பொருளாக மட்டுமல்லாமல், பாரம்பரிய மற்றும் அழகிய கலைப் பொருட்களாகவும் பார்க்கப்படுகின்றன. பெரிய மாளிகைகள் மற்றும் வீடு கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இவை, அவ்விடத்திற்க்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கின்றன.
தமிழகத்தில் ஆத்தங்குடி ஓடுகள் பொது ஆண்டு 18- 19ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்தன. அப்போது கடல் கடந்து வணிகம் செய்து வந்த செட்டிநாட்டு வணிகர்கள் இந்த ஓடுகளைப் பற்றி அறிந்து, அவற்றை உள்ளூரிலே தயார் செய்து, தங்களது மாளிகைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தினர். இந்த ஓடுகள் அனுபவம் பெற்ற பாரம்பரியக் கைவினைத் தொழிலாளர்களால், இயற்கை வண்ணங்கள், ஆற்று மணல், சுண்ணாம்பு போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அடிப்பகுதி ஆற்று மணல், சிமெண்ட் மற்றும் நீரைக் கொண்டு உருவாக்கப்பட்டு, கைவினைஞர்கள் மரம் அல்லது உலோக ஸ்டென்சில்களைப் (நகல் எடுக்க உதவும் உள்வெட்டுத் தகடு) பயன்படுத்தி வடிவமைப்புகளை உருவாக்குகின்றனர். இயற்கை மற்றும் கோயில் கட்டடக்கலையில் காணப்படும் வடிவங்கள் இவ்வோடுகள் தயாரிப்பில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஓடும் தனித்துவமானது. ஏனெனில் அதன் வண்ணம் மற்றும் வடிவமைப்பும் ஒன்றுக் கொன்று மாறுபடுகின்றது. ஓடுகள் நன்கு உலர்ந்தபின்பு, பளபளப்பான மேற்பரப்பை அடைய மெருகூட்டப்படுகின்றன. இறுதியாக மெழுகுப் பூச்சு பூசப்படுகிறது. இவ்வாறு செய்வதன்மூலம் அவற்றின் வாழ்நாள் கூடுகிறது. இந்த ஓடுகள் கையால் செய்யப்படுபவை என்பதால் அவற்றை உருவாக்குவதற்குக் கணிசமான நேரம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் பச்சை, நீலம், சிவப்பு, சாம்பல் வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆத்தங்குடியில் கிடைக்கும் மண்ணைக்கொண்டு இந்த ஓடுகள் உருவாக்கப்படுவது தனித்தன்மை வாய்ந்தது.
ஊர்
ஆத்தங்குடி
மாவட்டம்
சிவகங்கை